Saturday, June 19, 2010

இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்!

டிசம்பர் 1 , திங்கட்கிழமை, நான் சேர்ந்தேன். டிசம்பர் 3 தான் கடைசி வேலை நாள். மீண்டும் அலுவலகம் டிசம்பர் 13 திகதி தான்.

காரணம்?  ஹஜ் விடுமுறை.!!!!

சத்திய சோதனை!


கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு அரபி மொழியில் ஒரு லெட்டர் குடுத்தார்கள். இன்னார், இந்த வங்கியில் வேலை செய்கிறார். அவருடைய iqama  (குடிஉரிமை அட்டை)  நாங்கள்  வழங்க ஏற்பாடு செய்வதால், அவரிடம் வேற எந்த அடையாள அட்டையும் இல்லை என்று எழுதி இருந்தது.


வங்கியில் குடுத்த கடிதத்தை எப்போதும் (ஒரிஜினல்) கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எங்காவது போலீஸ் அல்லது முத்தவா (religious police ) கேட்டால் காட்ட வேண்டும் என்றும் சொன்னார்.


ரியாதில் சில நண்பர்கள் இருப்பதால், அங்கே போகலாம் என்று ஒரு திட்டம் போட்டேன். அதற்க்கும் வேட்டு வைத்து விட்டார்கள். இங்கே iquama  இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. ஏன், பஸ் அல்லது ரயில் டிக்கெட் கூட வாங்க முடியாது!!! மேலும் ரியாத் போகும் வழியில் சில செக் பாயிண்ட் இருப்பதாவும், சில சமயம் போலீசார் அந்த கடிதத்தை (குறிப்பாக ஊரு விட்டு ஊரு போனா) மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி தடுத்து விட்டனர்.


பத்து நாள் இருக்கே, பேசாம ஊருக்கு போயி வரலாம் நு கேட்டேன். அய்யே....., நீ நெனக்குற மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு போயிட்டு வர முடியாது. எங்க நாட்ட விட்டு வெளிய போகனும்னாலும் எக்ஸிட் விசா வேணும், iquama இல்லாம ஒன்னும் பண்ண முடியாது... BAD LUCK என்று சொல்லிவிட்டார்கள்.

நான் எந்த முடிவு எடுத்தாலும் அது iquama என்ற முட்டுச்சந்தில் வந்து நின்றது.

ஸோ, பத்து நாள் நான் complete ஹவுஸ் அர்ரெஸ்ட். எங்கும் போக முடியாது.

உலகத்துலேயே ஒரு நாட்ட விட்டு வெளியேற விசா கேக்குற ஒரு நாடு சவூதியா தான் இருக்கும்.

ஆபீஸ் கார் வேணும்னா பயன் படுத்திக்கோங்க, என்று சொல்லி டிரைவர வர வழைத்தார்கள். வந்தவர் பேரு ஜாவித், ஒரு பாகிஸ்தானி. எனினும், அவருக்கும் அஞ்சு நாள் ஹஜ் விடுமுறை இருப்பதாகவும், மற்ற நாட்களில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் என்று சொன்னார். முதலில் அவரை ஒரு நல்ல இந்திய உணவு விடுதிக்கு அழைத்து செல்ல சொன்னேன். மதினா உணவு விடுதியை அறிமுகம் செய்து வைத்தார். தஞ்சாவூர்கார்கள் நடத்துகிறார்கள், ஓரளவுக்கு பரவா இல்லை. இருவரும் உணவு அருந்தி கிளம்பினோம். பின்னர், வரும் வழியில் ஒரு சிம் கார்டு வாங்கினேன்.

நல்ல மனுஷன், முன் பின் தெரியாத என்னை நம்பி அவரோட iquama காபியை சிம் வாங்க குடுத்தார். நமக்கு தான் அந்த எழவெடுத்த iquama இல்லையே. பின்னர் ஆபீஸ் நோக்கி பேசிக்கொண்டே போக ஆரம்பித்தோம்.


ஸாப், நான் சாயங்காலம் உங்களை ரூம்ல டிராப் பண்ண வரவா என்று கேட்க, ஒன்னும் வேண்டாம் ஜாவித் பாய், நாலு பில்டிங் தாண்டி தானே ஹோட்டல் நான் நடந்து போய்கிறேன் என்று சொன்னேன்.


ஜாவித், இனிமே என்னை 'ஸாப்' என்று கூப்பிட வேண்டாம். நீயும் என்னோட வயதுக்காரன் தான். என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னேன். என்னை புன்னைகைதபடி ஒரு பார்வை பார்த்தான். க்யா ஹுவா ரே என்றேன். ஒன்னும் இல்லை யுவராஜ் ஜி. என்னை இது வரை யாரும் பெயர் சொல்லி கூப்பிடும் படி யாரும் சொல்லியது இல்லை. அதான் ஆச்சர்யமாக இருக்கு. நானும் நல்லாக தான் படித்தேன். பத்தாவதில் பள்ளியில் முதலாவதா வந்தேன். வீட்டில் எட்டு பேரு. மேற்கொண்டு படிக்க வசதி இல்லாதால் டிரைவர் வேலைக்கு செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆச்சு, ஒரு பத்து வருஷம் இங்க வந்து!

கேட்கும் போது பரிதாபமாக இருந்தது. ஜாவித், உனக்கு மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கிடைக்காதால் நீ டிரைவர் வேலை பார்க்க வேண்டியதா போய்விட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த வேலையில் இருக்கிறேன். அவ்வளவு தான். நீ எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. கடவுள் உனக்கு நிச்சயம் வேறு வகையில் உதவுவார் என்று சமாதானம் செய்தேன்.

(ஜாவிதை நான் முதல் முதலில் சந்தித்த போது என்னிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசினான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் நான் இந்தியன் என்று தெரிந்ததும் ஹிந்தி (அவனுக்கு உருது) பேச ஆரம்பித்தான். நிச்சயம் அவன் படிக்கற வாய்ப்பு இல்லாததால் இந்த வேலை செய்கிறான் என்று நான் நினைத்தேன். அது சரியாக இருந்தது)

அலுவலகத்தில் ஒரு வேலையும் இல்லை. Iquama இல்லாமல் ஒன்னும் நடக்காது என்று சொல்லி விட்டார்கள். பொழுது போக வேண்டும் என்பதற்காக credit policy manual எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு சிட்டி வங்கியின் ஒரு பகுதியாக (இந்த வங்கி) இருந்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு சில circulars மட்டுமே.

மாலை 5 . 30 . அநேகமாக எல்லோரும் போய்விட்டு இருந்தார்கள். வீட்டுக்கு போவதில் ரொம்ப நேரக்கட்டுப்பாடோட இருக்காங்க. யாரும் இல்லாதாதால், நானும் ஹோட்டல் நோக்கி கிளம்பினேன்.

நேற்று இரவு நேரம் செக் இன் செய்ததால் சில விஷயங்களை சரியே கவனிக்க வில்லை. அயர்ச்சி வேறு. இப்பொழுது சிறிது நோட்டம் விட ஆரம்பித்தேன். ஹோட்டல் நுழைவு கேட்டில் பலத்த பாதுகாப்பு இருந்தது. நான்கைந்து பாதுகாவலர்கள் அதிநவீன ஆயுதங்கள், வாக்கி டாக்கி சகிதம் எல்லா வண்டியையும் சோதனை போட்டு அனுமதித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஹோட்டல் புல்வெளியில் ஒரு நடை போனேன். மொத்தம் நாலு கேட் இருந்தது. எல்லா கேட்டிலும் அதே போல பாதுகாப்பு. கிட்டதிட்ட இருபது பேர். யோசித்த படியே லாபி நோக்கி நடந்தேன்.

லாபிக்குள்ளே போவதற்கு ஒரு circular கதவு இருக்கும். அது சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த கதவுக்கு வெளியே ஒரு பத்து மீட்டர் தள்ளி ஒரு கூடாரம் போல இருந்தது. காற்று போக சில ஓட்டைகள். என்னவாக இருக்கும் என்று ஒரு ஆசை. காசா, பணமா, போயி பாக்கலாமே என்று போனால்....

கிர்ர்ர்ர் அடித்து விட்டது.

அந்த கூடாரத்துக்குள் ஒரு 4 x 4 ஜீப். ஒருவர் ஓட்டுவதற்கு தயாராக. இன்னொருவர் இயந்திர துப்பாக்கியை இயக்க தயாராக. இந்த ஜீப் சரியா ஹோட்டல்லின் நுழைவு வாயிலை நோக்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரவது தாக்குதல் நடுத்தும் நோக்கில், உள்ளே வந்தால், முன்னேறா விடாமல் தடுப்பதற்கு!

இதுக்கு மேல இங்க தங்க நான் என்ன ??????.

முதலில் ஜாவேதுக்கு போன் செய்தேன். ஜாவேத், எனக்கு ஹோட்டல் காலி பண்ணிட்டு, ஒரு அபார்ட்மென்ட் பாக்கணும், ஏற்பாடு பண்ணு. நாளை காலையே போயி தேடலாம்.

"எதாவது பிரச்சினையா யுவராஜ் ஜி? " இது ஜாவித். அதெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்கு காலைல பேசலாம் நு செல்பேசியை அணைத்தேன்.

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

Indian banking sector is doing well and the Indian economy is doing well. Why did you move from India to Gulf country (That too Saudi),

அஷீதா said...

உங்க அனுபவங்களை நல்லா தொகுத்திருக்கீங்க. :)

ஜோதிஜி said...

இது போன்ற அடிப்படை மனித உணர்வுகள், வெளிநாட்டில் உள்ள நிகழ்ச்சிகளை இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைய எழுதுங்கள் யுவராஜ்.

YUVARAJ S said...

நன்றி @

ராம்ஜி
அஷீதா
ஜோதிஜி

ராம்ஜி: நான் சென்றது ஒரு குறுகிய கால அனுபவத்திற்கே. (உடனே, சம்பளம் வாங்கலையா கேட்காதீங்க!!.) இங்க என்ன தான் பெருசா இருக்குனு பாக்கலாம்னு வந்தேன். கொஞ்சம் காசு பாக்கறது தவிர ஒன்னும் இல்லை. நாமெல்லாம் வரவு எட்டணா, செலவு பத்தணா பேர்வழி. ஒன்னும் வேலைக்கு ஆகல. இதோ கொஞ்ச நாள்ல பொட்டி கட்டியாச்சு.

ஜோதிஜி: நான் சும்மா இருக்கேன்னு முடிவே பண்ணிட்டீங்க போல??? அப்படி எல்லாம் இல்லீங்க்ணா. இன்னும் சவுதில தான் இருக்கேன். 'விடுங்கப்பா' போறேன்னு சொன்னாலும் விட மாட்டேன்றாங்க. கொஞ்சம் நீங்க ரெகமன்ட் பண்ணுங்களேன். சீக்கிரம் ஊரு பக்கம் வந்து சேருறேன்.

ஜோதிஜி said...

நான் என்ன சொல்ல வந்தேன் என்பதையே மறந்து விட்டு வேறு விதமாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.