Friday, August 27, 2010

சுங்க சோதனை! ஒரு மலேசிய அனுபவம்....

இது சென்ற ஏப்ரல் மாத கடைசியில் நான் மலேசியா வழியே இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவம்.



சவுதியில் என்னோட வங்கியில் பணிபுரிந்த ஒரு நண்பருக்கு (அவன் ஒரு சவுதி) மலேசியாவில் ஒரு சின்ன வியாபார தொடர்பு இருந்தது. அது பற்றி மேற்கொண்டு விபரங்கள் சேகரிக்க அவனால் போக இயலவில்லை. எனவே, என்னை போக இயலுமா என்று கேட்டுக்கொண்டான்.



விஷயம் இது தான். அவன் புதிதாக ஒரு VALVE REPAIR UNIT துவங்க எண்ணி உள்ளான். இதற்கு வேண்டிய தொழில்நுட்பத்தை ஒரு மலேசியா நிறுவனம் தர முன்வந்தது. அந்த நிறுவனத்துக்கு அதற்க்கான கட்டமைப்பு இருகிறதா என்று பார்த்து வர வேண்டும். அந்த நிறுவனம் ஒரு சீனனுக்கு சொந்தமானது. மார்ச் மாதம் ஜுபைல் நகரத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் என்னோட நண்பனுக்கு இவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் கேட்ட தொகை ( TECHNICAL FEES ) ரொம்பவே அதிகமாக இருந்தது. எனினும், நண்பனுக்கு வியாபாரத்தை விட்டு விட மனம் இல்லை. எனவே, ஒருமுறை, அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு பின்பு பேரம் பேசலாம் என்று எண்ணினான்.



பஹ்ரைனிலிருந்து ஏப்ரல் 28 ஆம் தேடி கோலாலம்பூர் செல்ல வேண்டி இருந்தது. நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்த முறை மூக்கை தொட்டு, மலேசியா வழியாக!. நம்ம பசங்க கண்டிப்பா BLUE LABEL என்ற அறிய பொக்கிஷத்தை நிச்சயம் வாங்கி வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டனர். சரக்கு பஹ்ரைன் DUTY FREE ஷாப்பில் கிடைக்கவில்லை. பயணம் செய்த விமானத்தில் இருந்தது. எனவே வாங்கி என்னோட கைபையில் வைத்து கொண்டேன். பொதுவாக, விமான பயணத்தில் (தனியாக போகும் பொழுது) கைபொதி மட்டும் வைத்து கொள்வது வழக்கம். அதற்கு காரணம், ஒரு முறை பட்ட சூடு!!!!. வேறு ஒரு சந்தர்பத்தில் அதை பற்றி எழுதுகிறேன்.



விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ( KLIA ) தரை இறங்கியது. சவுதி குடிஉரிமை அட்டை வைத்து இருந்ததால் எனக்கு 120 மணிநேர ட்ரான்சிட் விசா கிடைத்தது. திரும்பும் போது பெரிய பல்பு வாங்குவேன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.



ஹோட்டல் ரூம் ஏற்கனவே புக் செய்தாகிவிட்டது. எனக்கு வண்டி ஓட்டுவது கொள்ளை இஷ்டம். எனவே, ஒரு RENT -A -CAR முன்பதிவு செய்து இருந்தேன். இறங்கியவுடம் வண்டி தயாராக இருந்தது. மலேசியாவை பொறுத்த வரை எனக்கு முதல் அனுபவம். காரில் GPS பொருத்த சொல்லி இருந்தேன். செய்து இருந்ததால் வண்டி ஓட்ட மிக சுலபமாக இருந்தது.



சென்ற வேலை, ஒரே நாளில் முடிந்தது. இறங்கிய அன்றே ஜோஹோர் பஹ்ரு சென்று அவர்களின் தொழிற்கூடத்தை பார்வை இட்டு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். நண்பனிடமும் பேசினேன்.



மறுநாள், நன்றாக ஊர் சுற்றி விட்டு, மூன்றாவது நாள் காலை KLIA நோக்கி, காரை செலுத்தினேன். அறையை காலி செய்யும் போது ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு மணிக்கு தான் விமானம். விமான நிலையம் செல்ல ஒரு 40 நிமிடம் மட்டுமே. எனவே, போதுமான அவகாசம் இருந்தது. KLIA சென்றவுடன், காரை திருப்பி குடுத்து பில் செட்டில் செய்தேன். போர்டிங் பாஸ் போடுவதற்கு கவுன்ட்டர் தேடினேன். எங்கேயும் காணவில்லை. ?????



மணி இப்போ 11 . 30 ஆகி இருந்தது. எனக்குள் லேசான பதட்டம். விமான நிலையத்தின் ஒரு மூலையில் AIR ASIA போர்ட் தென்பட்டது. ஆவலாக ஓடி போயி போர்டிங் பாஸ் கேட்டேன்.



அந்த பெண்மணி, என்னை நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள், ஊருக்கு புதுசா என்பதை போல!!!. வரும்போது எந்த விமானத்தில் வந்தாய் என்று கேட்டாள். நான் GULF AIR என்றேன். அதனால் தான் நீ KLIA வந்து இறங்கினாய். AIR ASIA விமானம் இங்கே வராது. அதற்க்கு LCCT டர்மினல் போக வேண்டும் என்றாள். வேறு டர்மினல் என்றவுடன் அக்கம் பக்கம் எங்காவது இருக்கும் என்று நினைத்தேன், நம்ம ஊரை போல. என் எண்ணத்தில் ஒரு இடி இறக்கினாள். LCCT இங்கிருந்து கிட்டதிட்ட 40 கீ.மி தாண்டி SEPANG அருகில் உள்ளது. கீழே போனால் பேருந்து கிடைக்கும், ஓடு என்று சிரித்தாள்.



வேறு வழி?? நானும் ஓடினேன். பேருந்து ஏறும்போது மணி 12 .10 . டிரைவரோ என்னோட அவசரம் புரியாமல் நிதானமாக செலுத்தினார். ஒரு மணிக்கு பேருந்து சென்று அடைந்தது. அடித்து பிடித்து போர்டிங் கார்டு வாங்கினேன். கொஞ்சம் ஷாப்பிங் செய்ததால் ஏழு கிலோவாக இருந்த கைபொதி பத்து கிலோ ஆகிவிட்டு இருந்தது. என்னிடம் வேறு பொதி இல்லாததால், அதை கைபொதியாக கொண்டு செல்ல அனுமதிக்கபட்டேன். மணி 1 .15 . கையில் போர்டிங் கார்ட் இருந்ததால் தைரியமாக இருந்தது.



இம்மிகிரேஷன் கூட்டமாக இருந்தது. எனவே, அதன் மேலதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரே உதவினார். இனிமே ஒரு சிரமமும் இல்லை என்று சீட்டி அடித்தபடி சுங்க சோதனை அடைந்தேன்.



என்னோட கைபொதி ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் பார்த்து கொண்டு இருந்தவன் மலாய் மொழியில் ஏதோ கத்த, என்னோட கைபொதி மட்டும் தனியே அப்புறபடுத்தப்பட்டது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சில வினாடிகளில் நன்றாக உறைத்தது. எல்லாம் நான் வாங்கின ப்ளூ லேபிளின் திருவிளையாடல் தான். சரக்கை அனுமதிக்க மறுத்து விட்டான். இதில் சிரிப்பு என்னவென்றால், சுங்க சோதனை முடித்த உடனே, சரக்கு கடை உண்டு. அங்கே வாங்கினால், கூட கொண்டு செல்லலாம். அனால் வெளி சரக்குக்கு அனுமதி இல்லை.



200 டாலர் மதிப்புள்ள சரக்கை அங்கேயே விட்டு செல்ல மனம் இல்லை. எனக்கு எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். உனக்கு 5 நிமிடம் தருகிறேன். ஓடிபோயி உன்னோட கைபொதியை செக்-இன் செய்து விட்டு வா. இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்றான். நான் ஏற்றுக்கொண்டேன். கூடவே இம்மிக்ராஷன் வரை வந்தான். என்னோட பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது. நான் ஓடிபோயி செக்-இன் கவுண்டரை அடைந்தேன். அவனும் முனகிக்கொண்டே செய்ய ஒத்துகொண்டான். இதற்குள் என் பெயரை ஒலிபெருக்கியில் கூவினார்கள். சொல்லுறது என் பேருதான், பொதி வந்துடுமா என்று கேட்டேன். அதெல்லாம், வரும் என்று தெனாவட்டாக ஒரு பதில் வந்தது.



மீண்டும் இம்மிக்ராஷன் வந்து, பாஸ்போர்டை பெற்றுக்கொண்டு, சுங்க சோதனையை முடித்து, போர்டிங் கேட் நோக்கி ஓடினேன். இதற்குள் இரண்டாவது முறையாக என்னோட பெயர் ஏலம் விடபட்டது. அடித்து பிடித்து விமானாம் ஏறி அமர்த்தும், ஒரு பெரிய தவறு செய்தது தெரிந்தது.



பதட்டத்தில் நான் என்னோட பையை பூட்டவே இல்லை. சரக்கையும் அவசரத்தில் மேலேயே வைத்து இருந்தேன். பட்ட கஷ்டம் எல்லாம் பாழாகி விடுமோ என்று ஒரு பதபதைப்பு. திருச்சி இறங்கியதும் என்னோட பை தான் கடைசியாக வந்தது. எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை. உலக அதிசயமாக, எல்லா பொருளும் பரம பத்திரம், ப்ளூ லேபில் உட்பட.



நீதி: ட்ரான்சிட் பயணத்தில் சரக்கு கையில் கொண்டு போக கூடாது.